Friday, September 7, 2007

அல்வா

நம்ம கதையோட நாயகன் ஒரு திருமணத்துக்கு போறார். உறவினர் வீட்டு கல்யாணம். போன உடனே அம்மா எங்கே அப்படின்னு தேடறார். அம்மா ஒரு மாமி கூடவும் ஒரு அழகான பொண்ணு கூடவும் பேசிட்டு இருக்காங்க. சார் கொஞ்சம் நைஸா அம்மணியை சைட் அடிக்கறார். தலைல இல்லாத முடியை கோதி விட்டுக்கறார்.
அம்மா: இவ்வளவு நேரமா வரத்துக்கு? கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருந்தா தாலியே கட்டி முடிச்சிருப்பா
அவன்: தூங்கிட்டேன்மா. நைட் பஸ்ல தூக்கமே இல்லை
(அம்மா கூட பேசிட்டு இருந்தாலும் அய்யா கவனம் எல்லாம் அம்மணி மேல தான். இது போறாதுன்னு அவங்க இவரை பார்த்து ஒரு சிறிய புன்முறுவல் புரிய தலைவர் இஸ்ரொ உதவியில்லாமயே விண்வெளில பறக்கறார்.)

அம்மா: சரி. பக்கத்தாத்துல சாவி கொடுத்துட்டு வந்தியா? வேலைக்காரி 11 மணிக்கு வருவா
அவன்: கொடுத்துட்டேன்மா!
அம்மா: சரி. நீ போய் டிபன் சாப்பிடு. மேடைல கூப்படறா. நான் வரேன்
அவன்: சரி மா.
(அம்மணி இன்னும் அங்கயேதான் இருக்காங்க)
அவள்: நீங்க பெங்களூர்ல வேலை பார்க்கறேளா? அம்மா சொன்னா
அவன்: ஆமாம். மன்னார் & கம்பெனில வேலை
அவள்: சரி வாங்கோ சாப்டுண்டே பேசலாம்
அவன்: நீங்களும் பெங்களூரா?
அவள்: இல்லை. நான் ப்ரியா
அவன்: என்னது?
அவள்:என் பேர் ப்ரியான்னு சொன்னேன்
அவன்: ஹி ஹி
அவள்: நான் மெட்ராஸ் தான்
எதிர்பார்க்காம அம்மணியே பேச ஆரம்பிச்சதுல மனுஷனுக்கு தலைகால் புரியலை.
அவன்: இந்த வாட்டி மெட்ராஸ்ல செம்ம வெயில்
அவள்: வருஷாவருஷம் இருக்கறதுதானே
அவன்: இந்த வருஷம் ஜாஸ்தியா இருக்கற மாதிரி இருக்கு
அவள்: உங்க ஊர்ல எப்படி இருக்கு?
அவன்: கிட்டதட்ட இப்படி தான் இருக்கு. ஆனா இப்படி வேர்க்காது
அவள்: அடுத்த வாரம் நான் அங்கே வரேன்
அவன்: ஓ! ஏதாவது வேணும்னா சொல்லுங்கோ
அவள்: கண்டிப்பா சொல்றேன். நீங்க எவ்ளோ வருஷமா அங்க இருக்கீங்க?
அவன்: ஒரு நாலு வருஷமா
அவள்: ஓ. அப்ப நன்னா பழகி இருக்கும் ஊரு.
(சொல்லிட்டு அவனோட இலையை அம்மணி பார்த்து)
அவள்: உங்களுக்கு கல்கண்டு அல்வா போட்டாளோ?
அவன்: இல்லையே? லேட் ஆயிடுத்துல. அதான் காலியாகிருக்கும். பரவால்லே விடுங்கோ
அவள்: அதெப்படி. ஏன்னா இங்க வாங்கோ. சார்க்கு கல்கண்டு அல்வா போட சொல்லுங்கோ
(பட்டு வேட்டி ஜிப்பாவோட ஒருத்தர் வறார்)
அவள்: இவர்தான் என் ஹஸ்பெண்ட். நாங்க தான் இந்த கல்யாண்த்திக்கு கேடரிங்க். இப்படி பண்ணி போர் அடிச்சு போச்சு. அதான் பெங்களூர்ல ஏதவது சாப்ட்வேர் கம்பெனிக்கு டெய்லி காண்ட்ராக்ட் போடுக்கலாம்னு தோண்றது. உங்க நம்பர் கொடுங்கோ. உங்க உதவி கண்டிப்பா தேவைப்படும்
அவன்: !!!!!

No comments: